ஜவுளிக்கடை மேலாளரிடம் ரூ.49 ஆயிரம் ‘அபேஸ்'
தேனியில் ஏ.டி.எம். மையத்தில் உதவி செய்வதுபோல் நாடகமாடி ஜவுளிக்கடை மேலாளரிடம் ரூ.49 ஆயிரம் ‘அபேஸ்’ செய்த பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டார்.
தேனி,
தேனி அருகே உள்ள குன்னூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). இவர் தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த மாதம் 25-ந்தேதி கடைக்கு சொந்தமான ரூ.50 ஆயிரத்தை கடையின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு சென்றார்.
வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், வங்கி வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்த சென்றார்.
அப்போது அங்கு ஒரு பெண் நின்றார். அந்த பெண் நாகராஜிக்கு உதவி செய்ய முன்வந்தார். இதனால் அவர் ரூ.50 ஆயிரத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்தார்.
அந்த பெண், எந்திரத்தில் பணத்தை செலுத்தினார். அப்போது ரூ.49 ஆயிரத்து 500 மட்டும் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும், ரூ.500 திரும்பி வந்துள்ளதாகவும் கூறி அதனை நாகராஜிடம் அந்த பெண் கொடுத்தார்.
அந்த பெண் பணம் செலுத்தும் நடைமுறையை முழுமையாக பூர்த்தி செய்யாமல், பணம் செலுத்திவிட்டதாகவும் எந்திரத்தில் ரசீது வரவில்லை என்றும் நாகராஜிடம் கூறியுள்ளார்.
அவரும் அதை நம்பி அங்கிருந்து சென்றார். அவர் வெளியேறியதும் எந்திரத்தில் பணம் செலுத்தும் நடைமுறையை ரத்து செய்து, பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து அந்த பெண் தப்பிச் சென்றார்.
ஜவுளிக்கடையின் வங்கி கணக்கில் பணம் வரவு ஆகாததால் நாகராஜ் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரித்தார்.
வங்கி அதிகாரிகளிடம் நடந்த விவரங்களை தெரிவித்தார். அதிகாரிகள் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த பெண் உதவி செய்வதுபோல் நாடகமாடி பணத்தை ‘அபேஸ்' செய்யும் காட்சி பதிவாகி இருந்தது.
இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நாகராஜ் புகார் செய்தார்.
அதன்பேரில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் மனைவி மணிமேகலை (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் தேனி போலீஸ் நிலையத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் மணிமேகலை பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்து இருப்பதும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த ஆண்டு இதேபோன்று பணத்தை ‘அபேஸ்' செய்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதும், விருதுநகர் மாவட்டத்திலும் அவர் மீது வழக்கு உள்ளதும் தெரியவந்தது.
Related Tags :
Next Story