நிலத்தகராறில் வாலிபரை கொன்ற 7 பேருக்கு ஆயுள்தண்டனை சென்னை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு


நிலத்தகராறில் வாலிபரை கொன்ற 7 பேருக்கு ஆயுள்தண்டனை சென்னை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 4 Feb 2021 3:58 AM GMT (Updated: 4 Feb 2021 3:58 AM GMT)

நிலத்தகராறில் வாலிபரை கொலை செய்த 7 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை செசன்ஸ் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

சென்னை, 

சென்னை கொசப்பேட்டை வெங்கடேச நாயக்கன் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 33). இவருக்கும், தாம்பரம் சானடோரியம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (42) என்பவருக்கும் இடையே திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

இந்தநிலையில் அந்த இடத்தை ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்ய சதீஷ்குமார் ஒப்பந்தம் செய்து ரூ.3 கோடியே 23 லட்சம் பெற்றதாக தெரிகிறது.

இதை அறிந்த பாலமுருகன், அந்த இடத்தை சுற்றி போடப்பட்டிருந்த கற்களை பிடுங்கி எறிந்து விற்பனை செய்ய விடாமல் தடுத்துள்ளார்.

கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், பாலமுருகனை கொலை செய்ய திரு.வி.க. நகரைச் சேர்ந்த முகமது மஜாசுதீன் (35) என்பவரை நாடினார்.

கடந்த 30.4.2016 அன்று பாலமுருகன் கோழிக்கறி வாங்க மூர்மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது சென்னை புரசைவாக்கம் அண்ணாமலை தெரு சந்திப்பில் முகமது மஜாசுதீன் தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து பாலமுருகனை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்தார்.

இதுகுறித்து வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார் உள்பட 8 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட விக்னேஷ் என்பவர் இறந்து போனார்.

7 பேருக்கு ஆயுள்தண்டனை

இதைத்தொடர்ந்து மற்ற 7 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை 6-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி டி.வி.ஆனந்த் முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் டீக்ராஜ் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சதீஷ்குமார், முகமது மஜாசுதீன், சென்னை வ.உ.சி.நகர் மதுரசாமி மடத்தைச் சேர்ந்த சகாயு (27), கோபிநாத் (23), நேரு பார்க் சாஸ்திரிநகரை சேர்ந்த மணிகண்டன் (25), புது வண்ணாரபேட்டையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (36), நெற்குன்றத்தை சேர்ந்த அருண்குமார் (35) ஆகிய 7 பேருக்கு ஆயுள்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story