சீர்காழியில் தாய்-மகன் படுகொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
சீர்காழியில் தாய் மற்றும் மகனை படுகொலை செய்து 12 கிலோ நகைகளை கொள்ளையடித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோட்டில் வாசிப்பவர் தன்ராஜ் சவுத்ரி (வயது 50). இவர், சீர்காழி அருகே தர்மகுளம் பகுதியில் நகை அடகு கடை மற்றும் நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஆஷா (45), மகன் அகில் (24), மருமகள் நிகில் (21), ஆகியோருடன் வசித்து வந்தார்.
கடந்த 27-ந் தேதி அதிகாலையில் இவரது வீட்டுக்குள் புகுந்த வடநாட்டு கொள்ளையர்கள் ஆஷா, மகன் அகில் ஆகிய இருவரையும் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 12 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
பின்னர் கொள்ளையர்கள் சீர்காழி அருகே உள்ள எருக்கூர் சவுக்கு காட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் சீர்காழி மற்றும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சவுக்கு தோப்பில் பதுங்கி இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மணிஷ்(23), ரமேஷ் பாட்டில்(27) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் மஹிபால்(28) என்பவர் போலீசை தாக்க முற்பட்டார்.
அப்போது போலீசார் மஹிபாலை என்கவுண்ட்டரில் சுட்டு கொலை செய்தனர்இவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ நகை மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த கும்பகோணத்தை சேர்ந்த கருணாராம்(45) என்பவரையும் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக சீர்காழி மற்றும் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு யுவப்பிரியா விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி டி.ஜி.பி.யிடம் பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story