கல்வி கட்டணம் குறைப்பு: சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்
கல்வி கட்டணம் குறைக்கப்பட்டதன் காரணமாக, சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் பிற அரசு மருத்துவக்கல்லூரியில் பெறப்படும் கல்வி கட்டணத்தையே தங்களிடமும் பெற வலியுறுத்தி கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்களது போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்தது.
இதையடுத்து உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கி வந்த இந்த மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறையின் கீழ் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும் மாணவர்கள் கல்வி கட்டணத்தை குறைக்கும் வரை தங்களது போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என கூறி நேற்று 58-வது நாளாக கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை தமிழக அரசு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் கல்வி கட்டணங்களை குறைத்து அரசாணை பிறப்பித்தது. இதையறிந்த மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தை வாபஸ் பெற்றதோடு, பல்கலைக்கழக வளாகத்தின் அருகே பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.
அப்போது மாணவர்கள் கூறுகையில், தங்களது கோரிக்கையை ஏற்று கல்விக்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story