தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண பைரவர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜை


தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண பைரவர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 5 Feb 2021 11:22 AM IST (Updated: 5 Feb 2021 11:25 AM IST)
t-max-icont-min-icon

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண பைரவர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்- விளந்தை கிராமத்தில் அழகு சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் சொர்ண ஹர்ஷ பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, இக்கோவிலுக்கு புதிதாக சொர்ண ஹர்ஷ பைரவர் உற்சவமூர்த்தி சிலை அமைக்கப்பட்டது. ரூ.1½ லட்சம் மதிப்பில் 60 கிலோ எடையுடன் 2 அடி உயரத்தில் செய்யப்பட்ட இந்த சிலைக்கான பிரதிஷ்டை பூஜை தொடங்கி நடந்தது. இதில் 326 சங்குகள், 64 கலசங்கள் ஆகியவற்றில் புனித நீர் ஊற்றப்பட்டு, அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விநாயகர், வள்ளி தெய்வானை சமேத அழகு சுப்பிரமணியர், சோமசுந்தரர், மீனாட்சி, மாரியம்மன், துர்க்கை, அய்யப்பன், அம்பிகை, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி யாகம் செய்தனர். பின்னர் ராகு காலத்தில், புதிதாக செய்யப்பட்ட சொர்ண பைரவர் சிலைக்கு சங்காபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் பல்வேறு அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் சொர்ண பைரவர் உற்சவமூர்த்தி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Next Story