பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டம்; கல்வி கட்டணத்தை குறைக்க கோரி நடந்தது
கல்வி கட்டணத்தை குறைக்க கோரி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து நுழைவுவாயிலில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வரும் முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் 200 பேர், நேற்று காலை 10 மணி அளவில் திடீரென வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் கல்லூரி நுழைவுவாயில் முன்பு அனைவரும் ஒன்று திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது கூறியதாவது:-
பெருந்துறை சாலை போக்குவரத்து மருத்துவக் கல்லூரியாக இருந்த இந்த கல்லூரியை, அரசு தன் பொறுப்பில் எடுத்து, அரசு மருத்துவ கல்லூரியாக மாற்றம் செய்து 2 ஆண்டுகளாகின்றன. ஆனால் இதுவரை கல்விக் கட்டணத்தை குறைக்கவில்லை. கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி நாங்கள் ஓராண்டாக போராடி வருகிறோம். இதுவரை எந்தவொரு தீர்வும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
கல்வி கட்டணத்தை குறைக்க கோரி...
சிதம்பரம் சர்.முத்தையா செட்டியார் மருத்துவக் கல்லூரியை அரசே எடுத்துக்கொண்டு, அங்கு படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை தற்போது வசூலித்து வருகிறது. அதேபோல் எங்கள் கல்லூரியிலும் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும். மற்ற அரசு கல்லூரிகளை போல தங்கள் கல்லூரியிலும், குறைந்த கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து, தங்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு மாணவ-மாணவிகள் கூறினார்கள்.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் கோஷமிட்டனர். இந்த போராட்டம் சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதைத்தொடர்ந்து மாணவ மாணவிகள், வகுப்பறைகளுக்கு செல்லாமல் விடுதிகளுக்கு சென்றனர். மாணவ-மாணவிகளின் இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story