சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை; சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை; சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 5 Feb 2021 10:26 PM GMT (Updated: 5 Feb 2021 10:26 PM GMT)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

ஆடு மேய்க்கும் தொழிலாளி
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் அப்பாதுரை (வயது 65), ஆடு மேய்க்கும் தொழிலாளி.இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ந் தேதி அதே பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்திற்கு வந்த 13 வயது சிறுமியிடம் நைசாக பேசி தனியாக அழைத்து சென்றார். பின்னர் அவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

10 ஆண்டுகள் சிறை
இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அப்பாதுரையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதாவது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அப்பாதுரைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார்.

Next Story