நெல் கொள்முதல் நிலைய விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகளால் பரபரப்பு
நெல் கொள்முதல் நிலைய விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூர், மஞ்சக்கோரை, வேப்பந்துறை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும்மேற்பட்ட விவசாயிகள் நேற்று திருச்சி தில்லைநகரில் உள்ள திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக கூறி வந்தனர். அப்போது ஸ்ரீரங்கம் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
விவசாயிகளின் பிரதிநிதிகள் 7 பேரை மட்டும் பரஞ்ஜோதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். மற்றவர்களை அருகில் உள்ள மக்கள் மன்ற வளாகத்தில் நிற்கும்படி கூறினார்கள்.
விவசாயிகளின் பிரதிநிதிகள் பரஞ்ஜோதியிடம் சென்றதும் குணசீலத்திலேயே நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு மாவட்ட செயலாளராகிய நீங்களும், பரமேஸ்வரி எம்.எல்.ஏ.வும் கூறியதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. அதனால் தான் முற்றுகையிட வந்தோம் என்றார்கள். அதற்கு அவர், நெல்கொள்முதல் நிலையம் தொடர்பாக நான் யாரிடமும் சிபாரிசு செய்யவில்லை. இது தவறான தகவல். அதிகாரிகள் தான் அதனை முடிவு செய்வார்கள். இருந்தாலும் உங்கள் கோரிக்கையை ஏற்று கல்லூரில் ஒரு நெல் கொள்முதல் நிலையம் திறக்கவும், குணசீலத்தில் ஒன்று திறக்கவும் அதிகாரிகளிடம் சிபாரிசு செய்கிறேன் என உறுதி அளித்தார். தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பரஞ்ஜோதி அளித்த உறுதியை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story