கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு: லால்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம்


கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு: லால்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2021 5:43 AM IST (Updated: 6 Feb 2021 5:43 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் லால்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் கூகூர், மேலவாழை, இடையாற்றுமங்கலம், பெரியவெர்சிலி, மயிலரங்கம், பச்சாம்பேட்டை, தண்டாங்கோரை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவை கொள்ளிடம் ஆற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் வாய்க்கால் மற்றும் மின் மோட்டாரை கொண்டு 3 போகம் நெல், வாழை, கரும்பு, உளுந்து, எள் ஆகிய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

நீர்வளம் மிக்க பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 20 அடியில் இருந்தது. கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்து 20 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டதால், தற்போது 70 அடிக்கு கீழ் நீர்மட்டம் சென்று விட்டது. மேலும் கோடைகாலத்தில் இயற்கையாகவே நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றுவிடுவதால் மின் மோட்டார்களில் தண்ணீர் வரத்து குறைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் எதிர்ப்பு

இந்தநிலையில் லால்குடி அருகே பெரியவர்சீலி ஊராட்சி செவ்வந்திநாதபுரம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைத்து அங்கிருந்து பெரம்பலூர் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இங்கு ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்தால் கொள்ளிடம் ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் 200 அடிக்கு கீழ் சென்றுவிடும் என்றும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விவசாயம் கேள்விக்குறியாகி விடும் என்றும், அப்பகுதி பொதுமக்கள் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

முற்றுகை போராட்டம்
இந்தநிலையில் கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி நேற்று காலை கொள்ளிடம் நீர் வாழ்வாதாரம் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட விவசாயிகள் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் லால்குடி ரவுண்டானா பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக தாலுகா அலுவலகத்துக்கு சென்றனர்.

அங்கு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு சென்றனர்.

Next Story