கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுபடுத்தும் முனைப்பில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு துறையின் வழிகாட்டுதலின் படி முதல் கட்டமாக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, குரோம்பேட்டை தாம்பரம் அரசு ஆஸ்பத்திரி, நந்திவரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என 3 மையங்களில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
இதேபோல் வருவாய்துறை, போலீஸ்துறை, நகராட்சி பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 400 பேருக்கு நாள் ஒன்றுக்கு 50 பேர் வீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த பணியை சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் நேற்று பார்வையிட்டனர். அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.
1 லட்சத்து 57 ஆயிரம் தடுப்பூசி
இதனை தொடர்ந்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தற்போது கொரேனா தடுப்பூசி போடும் மையங்கள் 440 செயல்படுகிறது. இந்த மையங்களின் மூலம் 1 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தேவையான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தேவைக்கேற்ப தடுப்பூசி போடும் மையங்கள் அதிகரிக்கப்படும் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு அச்சப்பட தேவையில்லை, மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் செங்கல்பட்டு பொது சுகாதார துணை இயக்குனர் பிரியாராஜ், தாம்பரம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், நந்திவரம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story