ரூ.2 ஆயிரம் கோடியில் ‘மெடி சிட்டி’ மருத்துவ திட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்


ரூ.2 ஆயிரம் கோடியில்  ‘மெடி சிட்டி’ மருத்துவ திட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 8 Feb 2021 9:55 PM IST (Updated: 8 Feb 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் ரூ.2 ஆயிரம் கோடியில் ‘மெடி சிட்டி’ மருத்துவ திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காரைக்கால், 

காரைக்கால் மாவட்டத்துக்கு கடந்த 4-ந் தேதி வந்த முதல்- அமைச்சர் நாராயணசாமி, புதிதாக அமைக்கப்பட்ட காரைக்கால் மேற்கு புறவழிச்சாலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது முன்னாள் அமைச்சரும், தி.மு.க. அமைப்பாளருமான நாஜிம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் முதல்-அமைச்சரை சந்தித்து பேசினர். 

அப்போது மேற்கு புறவழிச்சாலைக்கு மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பெயர் சூட்டப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முடிவுப்படி பெயர் சூட்டப்படவில்லை என்றும், அழைப்பிதழ், பேனர் உள்ளிட்டவைகளில் மேற்கு புறவழிச்சாலை என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என கூறி கருணாநிதி பெயர் ஏன் சூட்டப்படவில்லை? என முதல்-அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சாலை திறப்பு விழா அவசர, அவசரமாக நடந்ததால் பெயர் சூட்ட முடியாமல் போய்விட்டது. ஓரிருநாளில் அறிவித்தபடி சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என முதல்-அமைச்சர் தெரிவித்தார். 
அதன்படி நேற்று காரைக்கால் வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, காரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு, மு.கருணாநிதி புறவழிச்சாலை என்று பெயர் சூட்டி, அதற்கான பெயர் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் அர்ஜூன்சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், முன்னாள் அமைச்சர் நாஜிம், மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் சவுதா சின்னதம்பி, சந்திரமோகன், கருணாநிதி, தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் விக்னேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் முதல்-அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

காரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் வைக்கவில்லை என்றதும் சிலர் அதை அரசியலாக்க நினைத்தார்கள். அது இன்று இல்லாமல் போய்விட்டது. 

சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து காரைக்காலில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் ‘மெடி சிட்டி’ என்ற மருத்துவ திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மெடிசிட்டியில், அலோபதி, சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ திட்டங்களும், மூலிகை செடிகள் வளர்ப்பு திட்டமும் செயல்படுத்தப்படும். 

மிகப்பெரிய அளவில் அமைய உள்ள இந்த திட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் காணொலிக்காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினேன். விரைவில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கை. சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை அறியாத புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி கடந்த 5 ஆண்டுகளாக எதுவும் பேசாமல் தேர்தல் வரும் நேரத்தில் மாநில அந்தஸ்து குறித்து பேசுகிறார். இதில் இருந்து அவருடைய உள்நோக்கத்தை மக்கள் அறிந்துகொள்ள முடியும். 
சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story