ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன பெண் ஊழியர் பலி


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன பெண் ஊழியர் பலி
x
தினத்தந்தி 8 Feb 2021 11:03 PM IST (Updated: 8 Feb 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன பெண் ஊழியர் பலியானார்.

பென்னாகரம்:

திருவள்ளூர் மாவட்டம் பட்டறைபெருமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். லாரி டிரைவர். இவருடைய மகள் தனலட்சுமி (வயது 21). பி.பி.ஏ. பட்டதாரி. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனலட்சுமி, தன்னுடன் பணியாற்றும் சந்தோஷ்குமார், ராஜசேகர், பலராமன், மல்லேசன், விஷால் ஆகிய 5 பேருடன் ஓசூரில் இருந்து அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் சென்றனர். அவர்கள் அனைவரும் ஆலம்பாடியில் காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். 

பின்னர் காவிரி ஆற்றின் ஓரமாக நடந்து சென்றபோது பாறை வழுக்கி தனலட்சுமி ஆற்றில் விழுந்தார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் தனலட்சுமி காவிரி ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தனலட்சுமியின் உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனியார் நிறுவன பெண் ஊழியர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தது குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story