9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு; கல்லூரிகளுக்கு மாணவர்கள் உற்சாகமாக வந்தனர்


9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு; கல்லூரிகளுக்கு மாணவர்கள் உற்சாகமாக வந்தனர்
x
தினத்தந்தி 9 Feb 2021 1:44 AM IST (Updated: 9 Feb 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளுக்கு மாணவர்கள் உற்சாகமாக வந்தனர்.

தாமரைக்குளம்:

பள்ளிகள் திறப்பு
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த மாதம் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அரசு உத்தரவின்படி, நேற்று 9, 11-ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்றன.
அரியலூர் மாவட்டத்தில் 187 பள்ளிகளில் 9, 11-ம் வகுப்புகள் நடைபெற்றன. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து பாடம் பயின்றனர். முன்னதாக பள்ளி வந்த மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களின் கைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்த பின்னர், பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கல்லூரிகள்
இதேபோல் கல்லூரிகளில் இளங்கலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு, முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கின. அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 13 இளங்கலை பிரிவுகளில் முதலாமாண்டு மாணவர்கள் 912 பேரில், 680 பேர் கல்லூரிக்கு வந்தனர். இரண்டாம் ஆண்டில் 967 மாணவர்களில், 570 மாணவர்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு வந்த மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன், ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில் கல்லூரியை சேர்ந்த 260 மாணவ, மாணவிகளில் 208 பேர் நேற்று கல்லூரி வந்தனர். கல்லூரி வாசலிலேயே மாணவ-மாணவிகளுக்கு கிருமிநாசினி வழங்கி, கைகள் சுத்தம் செய்யப்பட்டு, பின்னர் தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டு, முகக் கவசம் அணிந்த பின்னரே கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை கடைபிடித்து அவர்கள் பெஞ்சுகளில் அமர வைக்கப்பட்டனர். முன்னதாக புதிய மாணவ, மாணவிகளை முதல்வர் ராஜமூர்த்தி வரவேற்று, கல்வி கற்பதற்கு மட்டுமே கல்லூரி என்பதை அறிந்தால், நீங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும், என்று அறிவுரை வழங்கினார்.
மாணவிகள் கருத்து
பள்ளி திறப்பு குறித்து ஆண்டிமடம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவி சுதா கூறுகையில், நான் கடந்த ஆண்டு எட்டாம் வகுப்பு படித்தேன். கொ ரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளி நடைபெறவில்லை. ஆன்லைன் வகுப்பு நடைபெற்றது. அதில் எனக்கு பாடங்கள் புரியவில்லை. தற்போது பள்ளிக்கு வந்து ஆசிரியர்களையும், தோழிகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன், என்றார்.
மீன்சுருட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி சவுந்தர்யா கூறுகையில், ஆன்லைன் வகுப்பு, பள்ளிக்கு சென்று வகுப்பறையில் படித்தது போல் இல் லை. வகுப்பறையில் சந்தேகம் ஏற்பட்டால் அந்த இடத்திலேயே மாணவிகளுக்கு புரியக்கூடிய வகையில் ஆசிரியர்கள் விளக்கி கூறுவார்கள். தற்போது பள்ளிக்கூடம் திறந்தது எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

Next Story