சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 9 Feb 2021 5:50 PM GMT (Updated: 9 Feb 2021 5:50 PM GMT)

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தி பெருமானுக்கு மஞ்சள் பொடி, திரவியப்பொடி, வில்வப்பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்தரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்தி பெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதேபோல் உடையார்பாளையம் பயறணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி நந்தி பெருமானுக்கு பால், தயிர், இளநீர், திரவியப்பொடி, பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் நந்தி பெருமானுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். சுவாமி பிரகார உலா நடைபெற்றது. அப்போது, 20 ஆண்டு காலமாக பிரதோஷ நாளில் ஒவ்வொரு சிவன் கோவிலாக தேர்ந்தெடுத்து பரதம் ஆடி வரும் உடுமலை செந்தில், நடனமாடினார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், இலையூர் காசிவிசுவநாதர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனீஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தி பெருமானுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story