ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்; கோர்ட்டு உத்தரவு


ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்; கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Feb 2021 7:22 PM GMT (Updated: 9 Feb 2021 7:22 PM GMT)

ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

செந்துறை:

வழக்கு
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை எதிரே வசித்து வருபவர் மலைராஜா. இவர் அப்பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி இருப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அப்போதிருந்த தாசில்தார் அன்பழகன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.
இந்த நிலையில் அதிகாரிகள் சட்டவிரோதமாக தனது சொத்துக்களை சேதப்படுத்திவிட்டதாக மலைராஜா, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிந்தது.
அபராதம்
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 21-ந் தேதி செந்துறை குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டு நீதிபதி மாணிக்கம் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உண்மை இல்லை என்று கூறி, அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தார். தீர்ப்பு வழங்கியபோது வழக்கு தொடர்ந்த மலைராஜா கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவரை கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று கோர்ட்டில் ஆஜரான மலைராஜாவிற்கு, 2 அரசு அதிகாரிகள் மீதும் பொய் வழக்கு தொடர்ந்ததற்காக தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, அதனைக்கட்ட தவறினால் 1 மாதம் சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.

Next Story