காஞ்சீபுரம் அருகே அண்ணன்-தம்பி தற்கொலை - தூக்கில் தொங்கினர்


காஞ்சீபுரம் அருகே அண்ணன்-தம்பி தற்கொலை - தூக்கில் தொங்கினர்
x
தினத்தந்தி 10 Feb 2021 5:36 AM IST (Updated: 10 Feb 2021 5:36 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே அண்ணன்-தம்பி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த செட்டியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வினோத்குமார் (வயது 30), சதீஷ்குமார் (28). சகோதரர்கள். இவர்களில் வினோத்குமாருக்கு சுகன்யா (23) என்ற மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். சதீஷ்குமாருக்கு கலைவாணி (25) என்ற மனைவியும், 6 மாத குழந்தையும் உள்ளனர்.

கலைவாணி அவரது தாய் வீட்டில் உள்ளார். வினோத்குமார் காஞ்சீபுரம் மண்டித்தெருவில் சொந்தமாக மெக்கானிக் கடை நடத்தி வந்தார். அவரது தம்பி சதீஷ்குமார் அதே பகுதியில் வாகன பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தார்.

கடந்த 1½ ஆண்டுகளாக சகோதரர்கள் இருவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர். இந்த காலகட்டத்தில் இவர்கள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டதை போன்று பேசிக்கொண்டும் உறவினர்கள் யாரையும் வீட்டில் சேர்க்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது.

வினோத்குமாரின் மனைவி வீட்டில் ஒரு அறையில் குழந்தையை கவனித்து கொண்டிருந்தார். அப்போது வினோத்குமாரும், சதீஷ்குமாரும் அருகில் இருந்த அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டனர். நீண்ட நேரமாகியும் உள்ளே சென்றவர்கள் வராததால் சுகன்யா இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, இருவரும் அந்த அறையில் இருந்த 2 மின் விசிறிகளில் தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story