பின்னோக்கி நகர்ந்ததால் விபத்து: டெம்போ சக்கரத்தில் சிக்கி ஒரு வயது குழந்தை சாவு


பின்னோக்கி நகர்ந்ததால் விபத்து: டெம்போ சக்கரத்தில் சிக்கி ஒரு வயது குழந்தை சாவு
x
தினத்தந்தி 11 Feb 2021 6:14 AM IST (Updated: 11 Feb 2021 6:14 AM IST)
t-max-icont-min-icon

மினி டெம்போ பின்னோக்கி நகர்ந்ததால் சக்கரத்தில் சிக்கி ஒரு வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் திருக்காலிமேடு அருந்ததி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ராதிகா. இவர்களது குழந்தை சபரீஸ்வரன் (வயது 1). மணிகண்டன் சொந்தமாக மினி டெம்போ வைத்துள்ளார். டிரைவராக அதே பகுதியை சேர்ந்த ஷேக் உள்ளார்.

தினமும் டெம்போவை மணிகண்டனின் வீட்டின் அருகே நிறுத்துவது வழக்கம். இந்த நிலையில் ஷேக், மினி டெம்போவை மணிகண்டனின் வீட்டின் அருகே நிறுத்தி விட்டு சரிவில் இறங்காமல் இருப்பதற்காக சக்கரத்தின் கீழே தடுப்பாக கல்லை வைத்து விட்டு சென்றதாக தெரிகிறது.

அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் தடுப்புக்காக வைக்கப்பட்ட கல்லை எடுத்ததாக கூறப்படுகிறது. இதில் மினி டெம்போ பின்னோக்கி நகர்ந்தது. டெம்போ சக்கரத்தில் சிக்கி சபரீஸ்வரன் படுகாயம் அடைந்தான். அங்கு இருந்தவர்கள் சபரீஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு சபரீஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். டிரைவரின் கவனக்குறைவு காரணமாக குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story