போலீஸ் நிலையம் அருகே துணிகரம்: கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
தா.பழூரில் போலீஸ் நிலையம் அருகே கடையின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர் திருடிச்சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் போலீஸ் நிலையத்திற்கு அருகில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிஸான்லால் என்பவர் எலக்ட்ரிகல் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர், கடையை வழக்கம்போல் பூட்டிவிட்டு கிஸான்லால் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை கடையை திறப்பதற்கு அவர் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
திருட்டு முயற்சி
இதேபோல் நேற்று முன்தினம் இரவில் அதே பகுதியில் உள்ள செல்வபதி என்பவர் நடத்தி வரும் பாத்திரக்கடையின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் மர்ம நபர் ஈடுபட்டதாகவும், பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு உரிமையாளர் எழுந்து வந்ததாகவும், இதனால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் குறித்து கடை உரிமையாளர்கள் 2 பேரும், தா.பழூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருட்டு நடந்த எலக்ட்ரிகல் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டபோது, அதில் திருட்டில் ஈடுபட்டவரின் உருவம் பதிவாகியிருந்தது. மேலும் அந்த நபர், பகல் நேரத்தில் கடையை நோட்டமிடுவதற்காக வந்து சென்ற காட்சியும் பதிவாகியிருந்தது. இது குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு மற்றும் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். போலீஸ் நிலையத்திற்கு வெகு அருகில் உள்ள கடையில் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டுள்ளதும், மற்றொரு கடையில் திருட்டு முயற்சி நடந்துள்ளதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story