ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளிக்க முயற்சி
சாத்தமங்கலத்தில் ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழப்பழுவூர்:
பணியிட மாற்றம் செய்ய கோரிக்கை
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சகுந்தலா பாண்டிராஜன். அந்த ஊராட்சியின் செயலாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ். இவர் ஊராட்சிக்கு தேவையான திட்ட பணிகள் எதையும் சரிவர செய்யவில்லை என்றும், ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மக்களுக்கான அடிப்படை தேவைகளை கூட செய்ய முடியாமல் ஊராட்சி செயலாளர் ரமேஷ் தடுப்பதாகவும், அவரை வேறு ஊராட்சிக்கு மாற்ற வேண்டும் என்றும் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா, அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து மனு அளித்தார்.
அதனை ஏற்று அதிகாரிகளும், ரமேசை கீழக்கொளத்தூர் ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டனர். ஆனால் ரமேஷ், பலரது சிபாரிசுடன் அந்த பணியிட மாற்ற உத்தரவை திரும்பப்பெற செய்து விட்டதாக கூறப்படுகிறது.
தீக்குளிக்க முயற்சி
இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா, ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்யக்கோரி தீக்குளிக்கப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தமங்கலம் விரைந்து வந்த கீழப்பழுவூர் போலீசார், ஊராட்சி மன்ற தலைவர் மண்எண்ணெய் கேனுடன் வீட்டை விட்டு வெளியே வந்தபோதே, அவரை தடுத்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று அறிவுரை வழங்கினர்.
மேலும் அதிகாரிகள் அவரை சந்தித்து, அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டு ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம் செய்யப்படுவார், அதற்கான கோரிக்கை மனுவை மீண்டும் அளிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் மாலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார். இந்நிைலயில் ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்யவில்லை என்றால் மீண்டும் பெரும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story