கோவை அருகே, தனியார் மருத்துவ கல்லூரியை விற்பதாக கூறி மோசடி - 2 பேர் கைது


கோவை அருகே, தனியார் மருத்துவ கல்லூரியை விற்பதாக கூறி மோசடி - 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2021 11:31 PM GMT (Updated: 11 Feb 2021 11:35 PM GMT)

கோவை அருகே தனியார் மருத்துவ கல்லூரியை விற்பதாக கூறி மோசடி செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போத்தனூர்,

கோவையை அடுத்த ஒத்தக்கால்மண்டபத்தில் கற்பகம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அந்த கல்லூரியை விலைக்கு வாங்க யாராவது இருக்கிறார்களா? என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேர் கோவையில் உள்ள ஒரு புரோக்கரிடம் கூறினார்கள். 

அது உண்மையா? என்று தெரிந்து கொள்வதற்காக அந்த புரோக்கர் மருத்துவ கல்லூரி மேலாளருக்கு போன் செய்து கேட்டுள்ளார். அதற்கு கல்லூரி மேலாளர் சிவக்குமார் அப்படியெல்லாம் இல்லை. இதை யார் சொன்னது என்று கேட்டார். 

அதற்கு அந்த புரோக்கர் மருத்துவ கல்லூரி விற்பனைக்கு உள்ளது என்று கூறிய 2 பேரின் செல்போன் எண்ணை கொடுத்தார்.

உடனே கல்லூரி மேலாளர் சிவக்குமார் அந்த செல்போன் எண்ணுக்கு போன் செய்து கல்லூரியை விலைக்கு வாங்குவது தொடர்பாக பேசுவதற்கு ஒத்தகால்மண்டபம் அருகில் உள்ள ஜே.ஜே. நகருக்கு வர முடியுமா என்று கேட்டார். 

இதை உண்மை என்று நம்பிய 2 பேரும் ஜே.ஜே. நகருக்கு வந்தனர். அவர்கள் கற்பகம் மருத்துவ கல்லூரி மேலாளர் என்று தெரியாமல் சிவக்குமாரிடம் கல்லூரியை விலை பேசினார்கள். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் கல்லூரியை விலை பேசிய 2 பேரும் சிவக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த 2 பேரையும் பிடித்து வைத்துக் கொண்டு செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் மருத்துவ கல்லூரியை விலை பேசிய கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த வி.சங்கர் (வயது 49), துடியலூர் என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ராமச்சந்திரன் (54) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

இவர்கள் 2 பேரும் மருத்துவ கல்லூரியை விற்பதாக கூறி மோசடி செய்ய முயற்சித்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சங்கர் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய 2 பேர் மீதும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story