சேலத்தில் முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது


சேலத்தில் முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 12 Feb 2021 5:20 AM IST (Updated: 12 Feb 2021 5:20 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

எடப்பாடி:
சேலத்தில் முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
முதல்-அமைச்சர்
தமிழக சட்டசபை தேர்தலையோட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் திருப்பத்தூரில் தேர்தல் பிரசாரம் செய்த அவர் மாலையில் சேலம் திரும்பினார். 
அதேசமயம், சேலத்தில் உள்ள முதல்-அமைச்சரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 
அதில், பேசிய மர்ம நபர், சேலம் மற்றும் சிலுவம்பாளையத்தில் உள்ள முதல்-அமைச்சரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
பாதுகாப்பு
இதையடுத்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிலும், சிலுவம்பாளையம் பகுதியில் உள்ள முதல்-அமைச்சரின் வீட்டிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதனால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். 
தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் இருந்து மிரட்டல் வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மிரட்டல் விடுத்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். 
கைது
இதில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த அன்பு என்கிற அன்பழகன் (வயது 47) என்பதும், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும், தன்னுடன் வேலை பார்க்கும் தொழிலாளியின் செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. 
இது குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்தனர். மேலும் அவர் எதற்காக மிரட்டல் விடுத்தார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story