சார்ஜாவில் இருந்து கோவைக்கு சினிமா பாணியில் ரூ.3 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தல் - 5 பேர் கைது
சார்ஜாவில் இருந்து கோவைக்கு சினிமா பாணியில் உடலில் கேப்சூல் மூலம் மறைத்து வைத்து ரூ.3 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
தங்கக்கடத்தல் கும்பல் ஒன்று சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையம் வழியாக தங்கத்தை கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலானய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு துறை துணை இயக்குனர் சதீஸ் தலைமையில், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் வந்த, சிவகங்கை, திருச்சி, சென்னை, ராமநாதபுரத்தை சேர்ந்த பயணிகள் சிலரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து அவர்களை தனியாக அழைத்து சென்று சோதனை செய்ததில் ஆசனவாய் பகுதியில் பசை வடிவிலான தங்கம், டேப் கொண்டு இறுக்கமாக சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இதன் பின்னரும் அவர்களின் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக அசவுகரியமாக இருந்தார். இதனைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அந்த நபர் சினிமா பட பாணியில் பசை வடிவிலான தங்கத்தை கேப்சூல் ஆக செய்து விழுங்கியதாக தெரிவித்தார்.
அயன் படத்தில் போதைப்பொருட்களை கேப்சூல் ஆக செய்து உடலில் மறைத்து வைத்து கடத்தி வரும் காட்சி இடம்பெற்றிருக்கும்.
தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இதில் அவர்களின் குடலுக்குள் கேப்சூல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களுக்கு இனிமா கொடுத்து அந்த கேப்சூல்களை வெளியில் எடுத்தனர்.
5 பயணிகளிடம் இருந்து மொத்தம் 6 கிலோ 642 கிராம் பேஸ்ட் வடிவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.3 கோடிக்கும் மேல் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நூதனமான முறையில் தங்கத்தை கடத்தி வந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் பெயரை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை.
மேலும் இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story