திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய இணை சார் பதிவாளர் கைது - மேலும் 2 பேர் சிக்கினர்


திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய இணை சார் பதிவாளர் கைது - மேலும் 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 12 Feb 2021 2:59 AM GMT (Updated: 12 Feb 2021 2:59 AM GMT)

திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய இணை சார் பதிவாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை போன்ற இடங்களில் ஐ.டி. நிறுவனங்கள், பன்னாட்டு் தொழில் சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த பகுதிகளில் உள்ள நிலங்களின் மதிப்பு அதிகம்.

இந்த அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இந்த அலுவலகத்தில் இணை சார் பதிவாளராக செல்வசுந்தரி என்பவரும், சார் பதிவாளராக பானுமதி என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று மதியம் 1 மணியளவில் சென்னை ஆலந்தூரில் இயங்கிவரும் லஞ்ச ஓழிப்புத்துறையின் துணை போலீஸ் சூப்பிரண்டு லவக்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஓழிப்புத்துறையினர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நடத்திய சோதனையில் சென்னை முகப்பேரை சேர்ந்த மயில்வேலன் என்பவர் தனது பெயரிலான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை பத்திரப்பதிவு செய்ய இணை சார்பதிவாளர் செல்வசுந்தரிக்கு ரூ.1,000, அலுவலக உதவியாளர் பிரபுவுக்கு ரூ.1,000 இடைத்தரகர் நவீன் மூலம் லஞ்சமாக வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஓழிப்புத்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story