காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்; புதுவை அ.தி.மு.க அன்பழகன் எம்.எல்.ஏ. உறுதி
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயக படுகொலை
புதுவையில் கடந்த 1990-ம் ஆண்டு தி.மு.க. அரசு இருந்தபோது மத்திய அரசின் உதவியுடன் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து அவர்களுக்கு வாக்குரிமை அளித்து ஜனநாயக படுகொலையை செய்துள்ளது. அந்த வரலாறு தெரியாமல் தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டுரிமை கூடாது என தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப் போவதாக கூறியுள்ளார். ஜனநாயக படுகொலையை தொடங்கிவைத்தவர்களே அவர்கள்தான்.
மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு இருந்தபோது புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை. மத்திய நிதிக்குழுவிலும் புதுவையை சேர்க்கவில்லை. அவர்களுக்கு வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
பொய்பிரசாரம்
தேர்தலில் ஆளுங்கட்சி தனது சாதனையை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். ஆனால் இவர்கள் புதுவையை தமிழகத்தோடு இணைக்க முயற்சி செய்வதாக பொய்பிரசாரம் செய்கின்றனர். இதற்காக காங்கிரஸ் கட்சியை புதுவையில் தேர்தல் ஆணையம் தடை செய்யவேண்டும்.
தனிமனிதரான கவர்னருக்கு புதுவையில் இவ்வளவு பாதுகாப்பு தேவையில்லை. இதனால் மக்கள்தான் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஒயிட் டவுண் தடுப்புகள் அகற்றப்பட வேண்டும். இதற்காக போலீஸ் டி.ஜி.பி., கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி போன்ற பதவிகளில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story