தண்டராம்பட்டு ஒன்றிய அலுவலகத்தை பூட்டி கவுன்சிலர்கள் போராட்டம்.


தண்டராம்பட்டு ஒன்றிய அலுவலகத்தை பூட்டி கவுன்சிலர்கள் போராட்டம்.
x
தினத்தந்தி 12 Feb 2021 5:27 PM GMT (Updated: 12 Feb 2021 5:27 PM GMT)

அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கக்கோரி தண்டராம்பட்டு ஒன்றிய அலுவலகத்தை பூட்டி 3-வது நாளாக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்டராம்பட்டு

தர்ணா போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 28 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அரசு நிதி ஒதுக்கவில்லை, எனக்கூறப்படுகிறது.

 நிதி ஒதுக்கக்கோரி கவுன்சிலர்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் அரசு ெசவி சாய்க்கவில்லை.
10-ந்தேதி 28 ஒன்றிய கவுன்சிலர்கள் கட்சி பாகுபாடின்றி சேர்ந்து ஒன்றிய அலுவலக ஊழியர்களை வெளியேற்றி விட்டு, கதவுகளை பூட்டி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து 2 நாட்களாக தர்ணா போராட்டம் நடந்தது. அதிகாரி நடத்திய பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை, தோல்வியில் முடிந்தது. 

பூட்டுப்போட்டு கோஷம்

ஒன்றிய கவுன்சிலர்கள் 3-வது நாளாக நேற்று காலை ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து ஒன்றிய அலுவலகம் முன்பு பந்தல் அமைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மதியம் 12 மணி வரை கால அவகாசம் வழங்கி, அதற்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அலுவலகத்தை பூட்டுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். 

அதேபோல் மதியம் 12 மணியளவில் அலுவலகத்துக்குள் நுழைந்து ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் அங்கிருந்த ஊழியர்களை கட்டாயமாக வெளியேற்றி விட்டு, மீண்டும் அலுவலகத்தை பூட்டி கண்டன கோஷம் எழுப்பினர். கவுன்சிலர்களின் போராட்டத்தால் அலுவலகத்தில் பணியாற்றும் மொத்தம் 45 பணியாளர்களில் 15 பேர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர்.

9 கவுன்சிலர்களுக்கு நிதி

ஆனால் மாலை வரை எந்த அதிகாரிகளும், கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த கவுன்சிலர்கள் நேற்று இரவு 8 மணியளவில் வீடு திரும்பினர். 

இதற்கிடையே, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த 2 கவுன்சிலர்கள் மட்டும் திட்ட இயக்குனரை சந்தித்துப் பேசினர். அப்போது 9 கவுன்சிலர்களுக்கு நிதி தரப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள 19 கவுன்சிலர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதை ஏற்க மறுத்த  கவுன்சிலர்கள் வரும் திங்கட்கிழமை போராட்டத்தை தொடர உள்ளதாக கூறினர்.
சட்டத்தை மீறிய செயல்
இந்தநிலையில் தண்டராம்பட்டு அருகே உள்ள கண்ணகந்தல் கிராமத்தில் நடந்த அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவுக்கு வந்த கலெக்டர் சந்திப் நந்தூரியிடம் கவுன்சிலர்கள் போராட்டம் தொடர்பாக நிருபர்கள் கேட்டபோது, தற்போது போதிய நிதி இல்லை, நிதி வந்ததும் கவுன்சிலர்களுக்கு அடிப்படை வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் தொடர்ந்து அரசு அலுவலகத்தை மூடி பூட்டுப் போடுவது சட்டத்தை மீறிய செயலாகும். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். எனத் தெரிவித்தார்.

Next Story