தக்கலையில் குரங்குகள் அட்டகாசம்


தக்கலையில் குரங்குகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 12 Feb 2021 6:01 PM GMT (Updated: 12 Feb 2021 6:01 PM GMT)

தக்கலையில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பத்மநாபபுரம், 
தக்கலையில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
குரங்குகள் அட்டகாசம்
தக்கலையில் உள்ள வெட்டிக்கோணம் பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சுமார் ஒரு மாதத்துக்கு முன் குரங்குகள் வந்தன. அவை தெருக்களில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டப்படும் உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தன. அதன்பிறகு குரங்குகளுக்காக வைக்கப்படும் உணவை சாப்பிட்டன.
தற்போது அந்த குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து சமைத்து வைத்துள்ள உணவு பொருட்களை எடுத்து செல்வதுடன், வீட்டில் உள்ள துணிகள் மற்றும் செல்போன் உள்பட பொருட்களையும் எடுத்து சென்று விடுகின்றன. குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அச்சம்
மேலும் மொட்டை மாடியில் காயப்போடும் உணவு தானியங்களை தூக்கி செல்கின்றன. இதுதவிர சிறுவர்கள் கையில் வைத்திருக்கும் உணவு பொருட்களையும் பிடுங்கி செல்கின்றன. இதனால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் வீட்டுக்குள் அச்சத்்துடனேயே வலம் வருகிறார்கள்.
வனப்பகுதியில் போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காததால் குரங்குகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட வனத்துறையினர் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து சென்று வன பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story