அட்டை குடோனில் தீ
பழனி அருகே அட்டை குடோனில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது.
பழனி:
பழனி அருகே உள்ள கோதமங்கலம் ஓம்சக்திநகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 33). இவர் போட்டோ பிரேம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இதற்காக அந்த பகுதியில் குடோன் வைத்து அங்கு பிளைவுட் மற்றும் அட்டைகள் வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் அவருடைய குடோனில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இதை அக்கம்பக்கத்தினர் பார்த்து கர்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அவர் அங்கு வந்து, பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார்.
ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை.
இதையடுத்து கர்ணன் உடனடியாக பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் நிலைய அலுவலர் ஆண்டவராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின் குடோனில் பிடித்த தீயை அணைத்தனர்.
எனினும் அங்கிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைகள், பிளைவுட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
மேலும் கட்டிட மேற்கூரையும் பலத்த சேதம் அடைந்தது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், மின்கசிவு மூலம் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story