15 ஆண்டுகள் ஓடிய வாகனம் காலாவதி என அறிவித்ததால் விரக்தி: சேலத்தில் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை


15 ஆண்டுகள் ஓடிய வாகனம் காலாவதி என அறிவித்ததால் விரக்தி: சேலத்தில் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 12 Feb 2021 10:31 PM GMT (Updated: 12 Feb 2021 10:31 PM GMT)

15 ஆண்டுகள் ஓடிய வாகனம் காலாவதி என அறிவித்ததால் விரக்தி அடைந்த ஆட்டோ டிரைவர் சேலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.

சேலம்:
15 ஆண்டுகள் ஓடிய வாகனம் காலாவதி என அறிவித்ததால் விரக்தி அடைந்த ஆட்டோ டிரைவர் சேலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆட்டோ டிரைவர்
சேலம் பொன்னம்மாபேட்டை செங்கணை ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 59), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி பத்மாவதி. இவர்களுக்கு பிரகாஷ், பிரபு ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடனுக்கு ஆட்டோ வாங்கி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சரவணன் ஓட்டி வந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த 1-ந் தேதி மத்திய பட்ஜெட்டில், 15 ஆண்டுகள் ஓடிய வாகனங்கள் காலாவதி ஆக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை கேட்டு ஆட்டோ டிரைவர் சரவணன் அதிர்ச்சி அடைந்ததோடு, தான் கடன் பெற்று வாங்கிய ஆட்டோ காலாவதி ஆகிவிடுமே, இனிமேல் என்ன செய்யப்போகிறேன்? என தனது நண்பர்களிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.
விஷம் குடித்து சாவு
இந்தநிலையில் மனமுடைந்த அவர் கடந்த 3-ந் தேதி திடீரென விஷம் குடித்து விட்டார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை ஆட்டோ டிரைவர் சரவணன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடிதம் சிக்கியது
அப்போது, ஆட்டோ டிரைவர் சரவணன் பயன்படுத்தி வந்த நோட்டில் வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில், போதிய வருமானம் இல்லாததாலும், கடன் சுமை காரணமாகவும், 15 ஆண்டுகள் ஓடிய வண்டிகள் காலாவதி என்று அறிவித்ததாலும் இந்த முடிவுக்கு நானே காரணம். என் குடும்பத்தாரிடம் தொந்தரவு செய்யாதீர்கள், என்று உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 ஆண்டுகள் ஓடிய வாகனங்களை காலாவதியாக மத்திய அரசு அறிவித்த நிலையில், ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்த சம்பவம் சேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story