அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு உடுப்பியில் தேர் வடிவமைக்கும் பணி?


அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு உடுப்பியில் தேர் வடிவமைக்கும் பணி?
x
தினத்தந்தி 13 Feb 2021 5:01 PM IST (Updated: 13 Feb 2021 5:01 PM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு உடுப்பியில் தேர் வடிவமைக்கும் பணி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அயோத்தி ராமர் கோவில்
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை செய்து வருகிறது. இந்த அறக்கட்டளை மற்றும் இந்து அமைப்பினர் நாடு முழுவதும் ராமர் கோவில் கட்டுமான பணிக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை ரூ.1,000 கோடிக்கு மேல் நிதி வசூலிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்காக நாடு முழுவதில் இருந்தும் மணல், நீர், பாறைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதுபோல் கர்நாடகத்தில் இருந்தும் மணல், பாறைகள், நீர் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் தேர் வடிவமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

அஞ்சனாத்திரி ஆஞ்சநேயர்
அயோத்தியை போல் ஆன்மிக தலமாக உடுப்பி திகழ்கிறது. அயோத்திக்கும், உடுப்பிக்கும் வரலாற்று தொடர்புகள் இருப்பதாக ஆய்வு குறிப்புகள் கூறுகின்றன. இந்த நிலையில் உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரமாண்ட தேர் தயாரிப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தேர் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்படவில்லை. அதாவது கர்நாடக மாநிலத்தின் பரிசாக இந்த தேரை அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்க கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மடாதிபதி அஞ்சனாத்திரிய சுவாமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. ராமாயணத்தில் ராம பிரானுக்கு ஆஞ்சநேயர் உதவி செய்தது போல், அயோத்தி ராமர் கோவிலுக்கு அஞ்சனாத்திரி மடம் சார்பில் இந்த தேரை வடிவமைத்து வழங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

உடுப்பியில் தேர் வடிவமைக்கும் பணி?
குந்தாப்புராவை சேர்ந்த பிரபல தேர் வடிவமைப்பாளரான லட்சுமிநாராயண ஆச்சார்யா குழுவினர் ராமர் கோவிலுக்கான தேரை வடிவமைக்க இருக்கிறார். இவர் உடுப்பி பாணி தேர்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர். இந்த வகை தேர் அயோத்தி வழிபாட்டுக்கு உகந்ததா இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. இருப்பினும் உடுப்பியில் ராமர் கோவிலுக்கு தேரை வடிவமைப்பது பற்றி அயோத்தி ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினருடன் அஞ்சனாத்திரி சுவாமி விவாதித்தாக மட வட்டாரங்கள் கூறுகின்றன.

80 அடி உயரம்
இதற்கிடையே ராமர் கோவிலுக்கான தேரை வடிவமைக்க உள்ள சிற்பி லட்சுமி நாராயண ஆச்சார்யா, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினரும், உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதியான விஸ்வ பிரசன்னா தீர்த்த சாமியை சந்தித்து ஆசி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த தேர் 80 அடி உயரம் கொண்டதாகவும், தேரில் ராமர், சீதை சிலை வடிவமைக்கப்பட இருப்பதாகவும், இந்த தேர் வடிவமைக்கும் பணி முடிய 2 ஆண்டுகள் ஆகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Next Story