இன்று காதலர் தினம்: தூத்துக்குடியில் ரோஜா பூக்கள் விற்பனை மும்முரம்


இன்று காதலர் தினம்: தூத்துக்குடியில் ரோஜா பூக்கள்  விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 13 Feb 2021 4:42 PM GMT (Updated: 13 Feb 2021 4:42 PM GMT)

காதலர் தினம் இன்று கொண்டாடப்படுவதால் தூத்துக்குடியில் ரோஜா பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.

தூத்துக்குடி:
காதலர் தினம் இன்று கொண்டாடப்படுவதால் தூத்துக்குடியில் ரோஜா பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.

காதலர் தினம்
உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை அடுத்து உலக அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு என்றால் அது காதலர் தினம் தான் என்று கூறலாம். தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ரோஜாவை கொடுத்து ஒருவர் தன் அன்பை, காதலை வெளிப்படுத்தும் நாள்.

காதலை வெளிப்படுத்த சிவப்பு ரோஜாவும், நட்பை வெளிப்படுத்த மஞ்சள் ரோஜாவும், சமாதானத்திற்கு வெள்ளை ரோஜாவும் கொடுப்பது வழக்கம். இந்த நாள் காதலர்களுக்கு தனிச் சிறப்பு வாய்ந்த நாளாகும்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த காதலர் தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் தூத்துக்குடி பூ மார்க்கெட்டிற்கு நேற்று பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து விற்பனைக்காக வந்து குவிந்து உள்ளன.

ரோஜா பூக்கள் 
இதுபற்றி பூ வியாபாரிகள் கூறும் போது, காதலர் தினம் என்றாலே ரோஜா பூக்கள் அதிகமாக விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

ஓசூர், பெங்களூரு, ஊட்டி, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூக்கள் தூத்துக்குடி பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக வந்து உள்ளன.

இதில் ஊட்டி ரோஜாப்பூ ரூ.20-க்கும், செரிபுறாபூ ரூ.15-க்கும், 20 ரோஜாப்பூ கொண்ட கட்டு ரூ.400-க்கும், பூங்கொத்துகள் ரூ.600 முதல் ரூ.1,500 வரைக்கும் விற்கப்படுகிறது. இதனை காதலர்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். மேலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களும் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் ரோஜா பூக்களை வாங்கி செல்கிறார்கள். 

கடந்த ஆண்டு காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்கள் விற்பனை நன்றாக இருந்தது. அது போல் இந்த வருடமும் காதலர் தினத்தில் ரோஜா பூ விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்கள். 

விலை அதிகரிப்பு
மேலும் காதலர் தினத்தையொட்டி திருமண முகூர்த்தமும் வருவதால் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை அதிகரித்தது. 1 கிலோ பிச்சிபூ ரூ.3 ஆயிரத்திற்கும், மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கும், சம்பங்கிப்பூ ரூ.1000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

Next Story