உடுமலை குப்பை கிடங்கில் தீப்பிடித்தது


உடுமலை குப்பை கிடங்கில் தீப்பிடித்தது
x
தினத்தந்தி 13 Feb 2021 5:12 PM GMT (Updated: 13 Feb 2021 5:12 PM GMT)

உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள மக்காத குப்பை சேகரிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

உடுமலை:-
உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள மக்காத குப்பை சேகரிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
மக்காத குப்பை சேகரிப்பு கிடங்கு
உடுமலை நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பதற்கான நுண் உரக்குடில்கள் 3 உள்ளது. இதில் ஒரு நுண் உரக்குடில் ராஜேந்திரா சாலையில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ளது. இந்த நுண் உரக்குடில் வளாகத்திலேயே மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், அட்டைகள், பழைய செருப்புகள், பழுதடைந்த மின் சாதனபொருட்கள் ஆகியவற்றை சேகரித்து வைக்கும் கிடங்கு தனியாக உள்ளது.
நகராட்சி பகுதியில் சேகரமாகும் இந்த மக்காத குப்பைகள், அங்கு பழைய துணிகள், ரெக்சின்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பழுதடைந்த மின் சாதனப்பொருட்கள் போன்றவை தனித்தனி வகையாக பிரிக்கப்பட்டு எந்திரம் மூலம் பண்டல் போட்டு வைக்கப்படும். 
அவை சேர, சேர 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை சிமெண்டு நிறுவனங்களுக்கு  எரி பொருள் பயன்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
தீ விபத்து
இந்த நிலையில் இந்த மக்காத குப்பைகள் சேகரிப்பு கிடங்கில் மக்காத குப்பைகள் பண்டல்போட்டு வைக்கப்பட்டிருந்தது. கிடங்குக்கு வெளிப்பகுதியில் பண்டலிடப்படாத மக்காத குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதிகாலை நேரத்தில் திடீரென்று அங்கு தீ பிடித்தது. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் உடுமலை தீயணைப்புத்துறையினர், தீயணைப்பு நிலைய அதிகாரி ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் தீ பரவாமல் தடுத்தனர். பின்னர் தீயில் எரிந்த சாம்பல் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story