அட்டகாசம் செய்த கரடி, கூண்டில் சிக்கியது


அட்டகாசம் செய்த கரடி, கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 13 Feb 2021 6:24 PM GMT (Updated: 13 Feb 2021 6:27 PM GMT)

கோத்தகிரி அருகே அட்டகாசம் செய்த கரடி, கூண்டில் சிக்கியது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மிளிதேன் பகுதி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக மிளிதேன் பகுதியில் கரடிகள் அட்டகாசம் அதிகரித்து வந்தது. 

நள்ளிரவில் ஊருக்குள் நுழையும் கரடிகள் பேக்கரி கடையை உடைத்து உணவு பொருட்களை தின்று அட்டகாசம் செய்தன. எனவே அந்த கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று நேற்று முன்தினம் அந்த பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. அதனுள் கரடிகள் விரும் தின்னும் பழ வகைகள் வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அங்கு வந்த 3 கரடிகளில் ஒரு கரடி கூண்டுக்குள் சிக்கியது. அதனை வெளியே கொண்டு வர மற்ற 2 கரடிகளும் போராடின. இதை கண்ட வனத்துறையினர் தீப்பந்தம் காட்டி அந்த கரடிகளை விரட்டியடித்தனர். தொடர்ந்து கூண்டுக்குள் சிக்கிய கரடியை பார்வையிட்டனர். அப்போது அது மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வனச்சரகர் செல்வகுமார், வனவர் சக்திவேல், வனக்காப்பாளர் வீரமணி மற்றும் கூடுதல் வனத்துறையினர் வந்தனர். தொடர்ந்து அந்த கரடியை கூண்டோடு சரக்கு வேனில் ஏற்றி அப்பர் பவானி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். 

கூண்டில் இருந்து வெளியேறிய கரடி ஆக்ரோஷ பாய்ச்சலுடன் வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. எனினும் கூண்டில் சிக்காமல் தப்பிய மற்ற 2 கரடிகளையும் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story