காய்கறிகள் விலை கிடு, கிடு உயர்வு
ஊட்டியில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், பீன்ஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, பூண்டு போன்ற மலை காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் உறைபனி தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறி பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.
விலை உயர்வு
இதற்கிடையில் சமவெளி பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது. இதற்கு காலம் தவறி பெய்த மழை மற்றும் காய்கறிகள் சேதம் அடைவதே காரணம் ஆகும். இதனால் ஊட்டியில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக சமையலுக்கு இன்றியமையாததாக காணப்படும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெண்கள் வெங்காயம் வாங்கும் அளவை குறைத்து கொண்டு உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலை உயர்வு ஏற்பட்டு பின்னர் குறைந்தது. தற்போது மீண்டும் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-
பெரிய வெங்காயம்-ரூ.60, தக்காளி-ரூ.30, உருளைக்கிழங்கு-ரூ.40, கேரட் -ரூ.20, பீட்ரூட்-ரூ.40, கத்தரிக்காய்-ரூ.60, அவரைக்காய்- ரூ.70, புடலங்காய்-ரூ.40, முருங்கைக்காய்-ரூ.120, வெண்டைக்காய்-ரூ.100 என விற்பனையாகிறது.
கீரை வகைகள் ஒரு கட்டு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சமவெளி பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகள் விலை உயர்ந்து இருக்கிறது. ஊட்டியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் விலை குறைந்து காணப்படுகிறது.
டீசல் விலை உயர்வால் வெளியிடங்களில் இருந்து சரக்கு வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வருவதற்கு அதிக செலவாகிறது. இதன் காரணமாகவும் காய்கறி விலை உயர்ந்து உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story