சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுகோள்
அரியலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரியலூர்:
சாலையோர ஆக்கிரமிப்புகள்
அரியலூர் நகரில் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் மார்க்கெட் தெரு, எம்.பி. கோவில் தெரு, வெள்ளாளத் தெரு, மேல அக்ரஹாரம், ராமலிங்கம் தெரு மற்றும் விளாங்கார தெரு, செந்துறை ரோடு ஆகிய சாலைகள் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. பஸ் நிலையத்தில் இருந்து தேரடி வரை சாலைகளின் இருபுறமும் நடைமேடை அமைத்து மின்கம்பங்களை சாலையின் நடுவில் அமைத்து அழகுபடுத்தும் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி பாதியில் நின்று போனது.
தற்போது இந்த பகுதியில் சாலையோரமாக புற்றீசல் போல் ஆக்கிரமிப்பு கடைகள் பெருகி வருகின்றன. இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட சிறிது கூட இடம் இல்லாத அளவிற்கு சாலையோரத்தில் கடைகள் உள்ளன. தற்காலிக கடைகளாக இருந்த அனைத்து கடைகளும், தற்போது அரசு அலுவலகங்களையும் ஆக்கிரமித்து பந்தல் போடப்பட்டு நிரந்தரமாக மாறிவிட்டன.
வேகத்தடைகள்
நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள், கடந்த காலங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் உருவாகும்போதே அவற்றை அப்புறப்படுத்தினர். தற்போது ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படவில்லை. திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலையின் ஓரம் சிமெண்டு கற்கள் பதித்து வண்ணங்கள் பூசப்பட்டு, மிக அழகாக சாலை காட்சியளிக்கிறது. ஆனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் செல்லும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. சாலை ஓரங்களில் உள்ள மண் அகற்றப்பட்டு மேடு, பள்ளங்கள் சரி செய்யப்படுவதில்லை.
கடந்த டிசம்பர் மாதம் முதல்-அமைச்சா் அரியலூருக்கு வந்தபோது சாலையில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. மீண்டும் கடந்த வாரம் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தார் அதிக அளவில் சேர்க்காமல் அமைக்கப்பட்டுள்ள இந்த வேகத்தடைகளில் தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக அரியலூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனையின் முன்பு கடந்த வாரம் அமைக்கப்பட்ட வேகத்தடையில் ஜல்லிகள் பெயர்ந்து சாலை முழுவதும் பரவி கிடக்கின்றது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சறுக்கு விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாைலயோர ஆக்கிரமிப்புகளை அகற்றி வேகத்தடையை தரமானதாக அமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் வேண்டுகோள் ஆகும்.
Related Tags :
Next Story