சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி முதியவரின் உடலை புதைக்க ஊராட்சி மன்ற தலைவர் எதிர்ப்பு; இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி முதியவரின் உடலை புதைக்க ஊராட்சி மன்ற தலைவர் எதிர்ப்பு; இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Feb 2021 8:00 PM IST (Updated: 16 Feb 2021 8:00 PM IST)
t-max-icont-min-icon

வெளியூரைச் சேர்ந்த முதியவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதியவர் சாவு
பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாணவேடு தோட்டம் ஊராட்சியில் வசித்து வருபவர் சரவணன். வங்கி மேலாளர். இவருடைய தந்தை லோகநாதன் (வயது 62) உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். அவரது உடலை அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய பள்ளம் தோண்டப்பட்டது. அவரது இறுதி ஊர்வலம் வீட்டில் இருந்து சுடுகாட்டை நோக்கி புறப்பட்டது. இதில் சரவணன் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.

புதைக்க எதிர்ப்பு
சுடுகாடு அருகே இறுதி ஊர்வலம் வந்தபோது அங்கு வந்த பாணவேடுதோட்டம் ஊராட்சி மன்ற தலைவரான அ.ம.மு.க.வைச் சேர்ந்த சிவசங்கர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் சிலர் முதியவரின் இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். உயிரிழந்த முதியவர் லோகநாதன், வெளியூரைச் சேர்ந்தவர். அவரது சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இங்குள்ள சுடுகாட்டில் அவரது உடலை புதைக்க கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சரவணன் மற்றும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் பூந்தமல்லி போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தகனம் செய்தனர்
இதனால் சுமார் 3 மணி நேரமாக முதியவர் உடல் சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் முதியவர் உடலை புதைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் விரக்தி அடைந்த சரவணன், இறந்தவர்களின் உடலை புதைக்கும் தங்களது வழக்கத்தை மாற்றி தனதுதந்தையின் உடலை தகனம் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள போரூர் மின் மயானத்தில் முதியவர் உடல் எரியூட்டப்பட்டது. ஆனால் சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்ய தோண்டிய பள்ளத்தை வெறுமனே மூடக்கூடாது என்பதால் கோழியை அறுத்து உள்ளே போட்டு பள்ளத்தை மூடிவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 More update

Next Story