100 பள்ளிக்கூட வளாகங்களில் தோட்டம் அமைப்பு


100 பள்ளிக்கூட வளாகங்களில் தோட்டம் அமைப்பு
x

திருவாடானை யூனியனில் 100 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.

தொண்டி, 
திருவாடானை யூனியனில் 100 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு செய்தார். 
இறப்பு விகிதம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து குறைவு மற்றும் ரத்தசோகையினால் தாய்வழி இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளதை அடுத்து இந்த பாதிப்பில் இருந்து கர்ப்பிணி தாய்மார்களை பாதுகாக்கும் வகையில் அவர்களின் ஆரோக்கியம் கருதியும் குழந்தைகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே அனைத்து வகை கீரைகள், கறிவேப்பிலை, தக்காளி, வெண்டைக்காய் ஆகியவற்றை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி வளாகங்களில் சத்தான காய்கறி மற்றும் கீரை வகைகள் பயிரிடப்பட்டு காய்கறித் தோட்டம் அமைக்க மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கூடுதல் கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.
அதன் அடிப்படையில் திருவாடானை யூனியனில் 47 ஊராட்சிகளை சேர்ந்த பள்ளி வளாகங்களில் ஊராட்சி மன்ற தலைவர்களின் முழு முயற்சியால் ஒரு சென்ட் நிலத்தில் வேலிகள் அமைக்கப்பட்டு 100 காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. 
தற்போது இந்த காய்கறி தோட்டங்கள் அனைத்தும் ஊராட்சி தலைவர்களின் கண்காணிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டும் களைபறித்தல் பாத்தி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதனால் கத்தரி, வெண்டை, தக்காளி போன்ற காய்கறிகள் கீரை வகைகள் முருங்கை, வாழை போன்ற மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன. இவற்றை திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
குறுங்காடுகள்

பின்னர் அவர் கூறியதாவது:- அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் காய்கறி தோட்டம் அமைத்து தற்போது காய்கறி, கீரைகள் நல்ல முறையில் வளர்ந்துள்ளன. இந்த யூனியனில் 47 ஊராட்சிகளிலும் குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு உலக சாதனைக்கான விருதுகள் அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காய்கறி தோட்டங்களால் நமது மாவட்டத்தில் தாய்வழி இறப்பு விகிதம் குறைத்திடவும் அதிக அளவில் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் பயன்பெறுவார்கள். மேலும் பொதுமக்கள் பயன் பெறும்வகையில் கூடுதல் காய்கறித் தோட்டங்கள் பள்ளி வளாகத்தில் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் செயல்படுத்தபடும் என்றும் தெரிவித்தார்.

Next Story