மதுக்கரை அருகே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் கணவரை தாக்கி கார் கடத்தல்


மதுக்கரை அருகே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் கணவரை தாக்கி கார் கடத்தல்
x
தினத்தந்தி 16 Feb 2021 7:02 PM GMT (Updated: 16 Feb 2021 7:19 PM GMT)

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் கணவரை தாக்கி கார் கடத்திய 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இது குறித்து கூறப்படுவதாவது:-

போத்தனூர்,

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சமீம். இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் வின்சென்ட் குமார் (வயது48). கட்டிடம் கட்ட தேவையான அலங்கார பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வின்சென்ட்குமார், தனது மனைவியுடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சொந்த வீட்டிற்கு சென்றார். இதையடுத்து வின்சென்ட்குமார்,  தனது மனைவி சமீமை காரில் அழைத்து வந்து காந்திபுரம் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு பாலக்காடு நோக்கி மதுக்கரை மரப்பாலம் அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவரது காரை மற்றொரு காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று வழிமறித்தது. பின்னர் அவரை இரும்புக்கம்பியால் தாக்கி காரில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதையடுத்து அவரின் காரை கடத்திக் கொண்டு அந்த கும்பல் கோவை நோக்கி தப்பிச்சென்றது.

மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்த வின்சென்ட்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். 

இந்த கடத்தலில் ஹவாலா கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story