வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தொடங்கியது


வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தொடங்கியது
x
தினத்தந்தி 16 Feb 2021 7:04 PM GMT (Updated: 2021-02-17T00:34:13+05:30)

பருவம் தவறி பெய்த மழையால் 2 மாதம் தாமதமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தொடங்கியது.

வேதாரண்யம்;
பருவம் தவறி பெய்த மழையால் 2 மாதம் தாமதமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தொடங்கியது. 
உப்பு உற்பத்தி
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்ட, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாேதவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, கோடியக்காடு உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன.
இதில் குறிப்பாக வேதாரண்யம் பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி முக்கிய தாழிலாக உள்ளது. 
வேதாரண்யம் தாலுகா அகஸ்தியம்பள்ளி கோடியக்கரை, கோடியக்காடு ஆகிய இடங்களில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்தி பருவம் தவறி பெய்த மழையால் காலதாமதமாக தொடங்கி உள்ளது. 
முன்னதாக உப்பு உற்பத்திக்கான முதல்கட்ட பணிகளான பாத்திகளை தயார் செய்தல், மண் அடித்தல், மிதித்து பாக்குவபடுத்துதல் போன்ற பணிகள் முடிவடைந்து உப்புபாத்தியில் தண்ணீரை தேக்கி வைத்தனர். 
உற்பத்தி குறைவு
இந்தநிலையில் 3 நாட்களுக்கு பிறகு வெயிலில் உப்பு உற்பத்தியாகி நேற்று முதன் முதலாக உப்பு எடுக்கும் (பொன் உப்பு எடுத்தல்) நிகழ்வு நடைபெற்றது. உப்பளங்களில் முதல் உப்பு எடுப்பதற்கு முன்பாக விநாயகர் பிடித்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை நடைபெற்று உப்பு எடுக்க தொடங்கினர். வேதாரண்யம் பகுதியில்  வழக்கமாக ஒரு ஆண்டுக்கு 6.5 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெறும்.  இந்த ஆண்டு  பருவம் தவறிய மழை காரணமாக 2 மாத கால தாமதமாக உப்பு உற்பத்தி தொடங்கியதால் உப்பு உற்பத்தி குறைவாக இருக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Next Story