மதுபான கூடத்தை மூட வலியுறுத்தி தஞ்சையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மதுபான கூடத்தை மூட வலியுறுத்தி தஞ்சையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
x
தினத்தந்தி 16 Feb 2021 7:53 PM GMT (Updated: 2021-02-17T01:23:12+05:30)

தஞ்சையில் மதுபான கூடத்தை மூட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:-
மதுபான கூடத்தை மூட வலியுறுத்தி தஞ்சையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுபான கூடம் 
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமாநகர் பஸ் நிறுத்தம் அருகே குளிர்சாதன வசதியுடன் கூடிய மதுபான கூடம் திறக்கப்பட்டுள்ளது. கிளப் போன்று உணவகத்துடன் செயல்படக்கூடிய தனியாருக்கு சொந்தமான இந்த மதுபான கூடத்தை மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் மதுபான கூடம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தாசில்தார் பாலசுப்பிரமணியன், டாஸ்மாக் உதவி மேலாளர் வெங்கடேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் ராஜே‌‌ஷ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களும் வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சந்தித்து பேசினர்.
அமைதி பேச்சுவார்த்தை 
அப்போது மதுபான கூடம் செயல்பட அனுமதி அளிக்கக்கூடாது. அதை மீறி செயல்பட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் தெரிவித்தனர். தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி மேற்பார்வையில் அமைதி பேச்சுவார்த்தை வருகிற 19-ந் தேதி நடத்தி, மதுபான கூடம் வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்வதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த கோரிக்கையை ஏற்று மக்கள், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பள்ளி மாணவ, மாணவிகள் அதிகமாக செல்லக்கூடிய இப்பகுதியில் மதுபான கூடம் திறக்க எப்படி அனுமதி அளித்தார்கள். அதுவும் பஸ் நிறுத்தம் அருகே மதுபான கூடம் செயல்பட்டால் பயணிகளுக்கு பல்வேறு வகையில் துன்பங்கள் ஏற்படும். மதுபான கூடத்தை மூடவில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Next Story