திருச்சி நாகநாதசுவாமி கோவிலில் பரபரப்பு கருவறைக்குள் நுழைய விடாமல் அர்ச்சகர் வாக்குவாதம் பணிநீக்கம் செய்யப்பட்டதால் விரக்தி


திருச்சி நாகநாதசுவாமி கோவிலில் பரபரப்பு கருவறைக்குள் நுழைய விடாமல் அர்ச்சகர் வாக்குவாதம் பணிநீக்கம் செய்யப்பட்டதால் விரக்தி
x
தினத்தந்தி 16 Feb 2021 9:37 PM GMT (Updated: 16 Feb 2021 9:37 PM GMT)

திருச்சி நாகநாத சுவாமி கோவிலில் பணிநீக்கம் செய்யப்பட்டதால் புதிதாக வந்த அர்ச்சகரை கருவறைக்குள் நுழைய விடாமல் தடுத்து பழைய அர்ச்சகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மலைக்கோட்டை, 

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் ஆனந்தவல்லி சமேத நாகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆகம விதிகளை மதிக்காமல் பூஜை செய்து வந்ததாக அர்ச்சகர் திலீபன் மற்றும் அவருடைய தம்பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன் சிவனடியார்கள் திரண்டு வந்து, கோவில் செயல் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்தனர்.

இதுதொடர்பாக மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி விசாரணை நடத்தினார். பின்னர் அர்ச்சகர் திலீபனை நேற்று முன்தினம் பணிநீக்கம் செய்ததுடன், புதிதாக ஒரு அர்ச்சகரையும் அவர் நியமனம் செய்தார். 

வாக்குவாதம்

இதைத்தொடர்ந்து, புதிய அர்ச்சகர் நேற்று காலை கோவிலில் பூஜை செய்ய சென்றார். அதே நேரம் நேற்று பஞ்சமி திதி என்பதால் காலை முதலே பக்தர்கள் அதிகமாக கோவிலுக்கு வந்திருந்தனர். 

அப்போது, பழைய அர்ச்சகர் திலீபன், விரக்தியில் அவரை தடுத்ததுடன், கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்து, நான்தான் பூஜை செய்வேன், இங்கு யாரும் வரக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டை போலீசார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். பின்னர், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, நாளை முதல் மாசி பிரம்மோற்சவம் தொடங்க இருப்பதால், திருவிழா முடியும் வரை பிரச்சினையின்றி பூஜை நடைபெற வேண்டும். எனவே அதுவரை அர்ச்சகர் திலீபனே பூஜைகள் நடத்தவும், அவருக்கு உதவியாக கூடுதலாக ஒரு அர்ச்சகரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பழைய அர்ச்சகரே நேற்று பூஜைகளை மேற்கொண்டார்.

Next Story