ஜனநாயக முறையில் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்-டி.டி.வி. தினகரன் பேட்டி


ஜனநாயக முறையில் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்-டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 16 Feb 2021 9:38 PM GMT (Updated: 16 Feb 2021 9:38 PM GMT)

ஜனநாயக முறைப்படி, அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.


திருச்சி, பிப்.17-
ஜனநாயக முறைப்படி, அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

திருச்சிக்கு வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மீட்டெடுப்போம்
ஜெயலலிதா பெயரிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டதே ஜனநாயக முறையில் அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதுதான். அம்மாவின் உண்மையான ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டுவருவதே எங்கள் கொள்கை ஆகும். தொடர்ந்து அதே திசையில் பயணித்து கொண்டிருக்கிறோம்.

சென்னை ஆர்.கே.நகரில் எவ்வாறு நாங்கள் சாதனை படைத்தோமோ, அதுபோல ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் தமிழகம் முழுவதும் வரும் தேர்தலில் சாதனை படைப்பார்கள். அ.தி.மு.க.வை மீட்டெடுக்க அங்கு ஸ்லீப்பர் செல்லாக இன்னமும் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் ஸ்லீப்பர் செல்லில் ஒருவர்தான், சசிகலா வருவதற்கு கார் கொடுத்தவர்.

பரதன் யார்?

அமைச்சர் சி.வி.சண்முகம் யாருக்கு எச்சரிக்கை கொடுத்தார் என தெரியவில்லை. முதலில் அவர் நிதானமாகத்தான் இருந்தாரா?. அந்த மாதிரி வேளையில்தான் அவர் உண்மையை ஒத்துக்கொண்டார் போலும். அந்த காலத்தில் அடிமைகளை யாரும் தலைவாழை இலைபோட்டு கவனிக்க மாட்டார்கள். நிற்க வைத்து கலையத்தை கையில் கொடுத்து கஞ்சியோ, கூழோ ஊற்றுவார்கள். அந்த அடிப்படையில்தான் ஊத்தி கொடுத்தவர்கள் நாங்கள் என்று சொல்லி உள்ளார்.

இந்த அரசு வெற்றி நடைபோடவில்லை. இடுப்பொடிந்த அரசு. பரதன் அம்மா மரணத்திற்கு பிறகு கொடுக்கப்பட்ட ஆட்சியை ஒப்படைத்து விட்டு அமைதியாக இருந்திருந்தால் பிப்ரவரி 15, 16-ந் தேதிகளில் மீண்டும் பரதனாகி இருக்கலாம். ஆனால், அவர் ராவணனோடு சேர்ந்து விட்டார். அதனால், அவருக்கும் பிரச்சினை. நாட்டுக்கும் பிரச்சினை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக அ.ம.மு.க. மாநில பொருளாளர் மனோகரனின் தாயார் ராமலட்சுமி மறைைவயொட்டி, திருச்சி திருவானைக்காவலில் உள்ள  அவருடைய வீட்டுக்கு நேரில் சென்று டி.டி.வி. தினகரன் துக்கம் விசாரித்தார்.

Next Story