சொந்த கார் வைத்திருப்பவர்களுக்கு ரூ.275 மாதாந்திர சலுகை அட்டை: சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறை முழுமையாக அமல்


சொந்த கார் வைத்திருப்பவர்களுக்கு ரூ.275 மாதாந்திர சலுகை அட்டை: சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறை முழுமையாக அமல்
x
தினத்தந்தி 17 Feb 2021 6:29 AM GMT (Updated: 2021-02-17T11:59:48+05:30)

‘பாஸ்டேக்’ முறை நேற்று அதிகாலை முதல் முழுமையாக அமலுக்கு வந்ததை தொடர்ந்து, சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

சென்னை, 

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதற்காக ரொக்கமாக பணம் செலுத்த நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் நேரம் வீணடிக்கப்படுவதுடன், எரிபொருள் செலவும் அதிகரித்து வந்தது. இப்பிரச்சினையை தவிர்க்க, இந்திய நெடுஞ்சாலை ஆணையம் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் ‘பாஸ்டேக்’ முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறை, நேற்று அதிகாலை முதல் முழுமையாக அமல்படுத்தப்பட்டது.

இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வானகரம், போரூர், சூரப்பட்டு, மாத்தூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. ஏற்கனவே ‘பாஸ்டேக்’ முறைக்கு மாறிய வாகனங்கள் வரிசையில் நிற்காமல் விரைவாக சுங்கச்சாவடிகளை கடந்து சென்றன.

சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் பலர் இந்த முறைக்கு மாறாததால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்ட்டர்களில் ‘பாஸ்டேக் ஸ்டிக்கரை’ வாங்கி கார்களின் முகப்பில் ஓட்டிக்கொண்டு சென்றனர். ஸ்டிக்கர் வாங்க விரும்பாதவர்கள் அதிருப்தியுடன் இரு மடங்கு கட்டணங்களை செலுத்தி சென்றனர். சிலர் சுங்கச்சாவடி பணியாளர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

80 சதவீத வாகனங்கள்

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 570, தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளை பராமரித்து வருகிறது. அங்கு பாஸ்டேக் முறை கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் வாகன ஓட்டிகள் கேட்டுக்கொண்டதால் படிப்படியாக அரசு காலஅவகாசம் வழங்கிவந்தது. கடந்த 15-ந் தேதி நள்ளிரவு முதல் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதில் அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள், வாடகை கார்கள் உள்ளிட்ட 80 சதவீதம் வாகன ஓட்டிகள் ‘பாஸ்டேக்’ முறைக்கு மாறிவிட்டனர். மீதமுள்ள 20 சதவீத வாகனங்கள் மட்டும் இந்த முறைக்கு மாறவில்லை.

வாகன ஓட்டிகளுக்கு சலுகைகள்

சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக் ஸ்டிக்கர்’ விற்பனைக்கு தனியாக சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ள நீதிபதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது அங்கீகரிக்கப்பட்ட வாகனத்துக்கு ‘பாஸ்டேக் ஸ்டிக்கர்’ வழங்கி உள்ளோம்.

சுங்கச்சாவடிகளை சுற்றி 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் தங்களுடைய சொந்த கார்களுக்கு மாதம் ரூ.275 செலுத்தி மாதாந்திர சலுகை அட்டை பெற்றுக்கொண்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம். அதேபோல் சுங்கச்சாவடி இருக்கும் மாவட்டங்களைச் சேர்ந்த வணிக வாகனங்களுக்கும் பாதி கட்டண சலுகை அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, வாகனத்தின் பதிவு சான்றிதழ்களின் நகல்களை அளிக்க வேண்டும். ‘பாஸ்டேக் ஸ்டிக்கர்’ வாங்க விரும்பாதவர்கள் இருமடங்கு கட்டணத்தை செலுத்தியும் செல்ல முடியும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்

இதுகுறித்து, போக்குவரத்து சார்ந்த தொழிலில் ஈடுபட்டுவரும் அம்பத்தூரைச் சேர்ந்த பரத் கூறியதாவது:-

ஏற்கனவே சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோல சுங்கச்சாவடி கட்டணத்தை அதிகரித்துக்கொண்டே போனால் போக்குவரத்து சார்ந்த தொழில்கள் நசுக்கப்படுவதுடன், விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும்.

பெட்ரோல் பங்குகளில் ஸ்டிக்கர்

மருந்து கம்பெனியில் பணியாற்றி ஓய்வுபெற்ற எல்.வெங்கட்ரமணி கூறும்போது, ‘பாஸ்டேக் ஸ்டிக்கர்’ வாங்குவதற்கு சுங்கச்சாவடிகளை தேடி வரவேண்டி இருக்கிறது. மாநகரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இதை விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

வானகரத்தில் ‘பாஸ்டேக் ஸ்டிக்கர்’ விற்பனை செய்யும் சிறப்பு கவுண்ட்டர் நிர்வாகி தீபன் கூறும்போது, வானகரம் சுங்கச்சாவடியில் முதல் நாளிலேயே ஆயிரம் ஸ்டிக்கர்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. வாகனத்தில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யப்படுவதால், எந்தச் சூழ்நிலையிலும் அது சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சேதமடைந்தால் ஸ்கேன் செய்ய முடியாது என்பதால், புதிய ஸ்டிக்கர்தான் வாங்க வேண்டியிருக்கும்’ என்றார்.

Next Story