திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அரியர் தேர்வுகள் தொடங்கின


திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அரியர் தேர்வுகள் தொடங்கின
x
தினத்தந்தி 17 Feb 2021 3:35 PM GMT (Updated: 17 Feb 2021 3:35 PM GMT)

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அரியர் தேர்வுகள் தொடங்கின

வேலூர்

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 134 அரசு, அரசு நிதியுதவி, சுயநிதி, பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன. அதனால் இறுதி பருவத்தேர்வு தவிர பிற தேர்வுகளையும், அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்வுகள் நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்கால தடை விதித்தது.

அரியர் தேர்வுகள்

அதைத்தொடர்ந்து திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு எழுத மாணவர்கள் கட்டணம் செலுத்தும்படி தெரிவித்தது. மாணவர்கள் பதிவு, தேர்வு கட்டணத்தை ரத்து செய்யும்படி ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து பதிவு கட்டணம் மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கான தேர்வு தொடங்கியது. கல்லூரிகளில் 2, 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்வை கல்லூரியில் இருந்தும், கல்லூரி முடித்து சென்ற மாணவர்கள் தேர்வை வீட்டில் இருந்தபடியே எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

முதல்நாளான நேற்று இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் முதல் செமஸ்டரில் உள்ள அனைத்து பாடங்களுக்கான அரியர் தேர்வு நடைபெற்றது. அதாவது ஒரு செமஸ்டரில் தேர்வு எழுதாத மாணவர்கள் ஒரேநாளில் 5 தேர்வுகளையும் எழுதும்படி அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. இது மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதிப்பெண்கள் பதிவேற்றம்

தேர்வு வினாத்தாள் மாணவர்களின் செல்போன் மற்றும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. வீட்டில் இருந்து தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளை விரைவு தபால் மூலம் கல்லூரிக்கு அனுப்பி வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். வருகிற 21-ந் தேதி வரை அரியர் தேர்வுகள் நடைபெற உள்ளது.

கல்லூரிகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள் அன்றைய தினத்திலும், விரைவு தபால் மூலம் வரும் விடைத்தாள்கள் திருத்தம் செய்து மதிப்பெண்கள் வருகிற 24-ந் தேதிக்குள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

---

Next Story