திண்டுக்கல்-சேலம் இடையே 110 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை


திண்டுக்கல்-சேலம் இடையே 110 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை
x
தினத்தந்தி 17 Feb 2021 4:02 PM GMT (Updated: 17 Feb 2021 4:02 PM GMT)

திண்டுக்கல்-சேலம் இடையே 110 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.

திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா தாக்கம் குறைந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெயில் சேவை தொடங்கியது. எனினும், ஒருசில ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரெயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை.அதேநேரம் சரக்கு ரெயில் சேவை அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்குக்கு பின்னர் சரக்கு ரெயில் சேவை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, ரெயில் தண்டவாள பராமரிப்பில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. இதையொட்டி தண்டவாளத்தின் உறுதி தன்மையை கண்டறிவதற்கு ரெயில்வே பொறியாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ரெயில் போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளில், தனி ரெயிலை இயக்கி சோதனை செய்து வருகின்றனர்.
அதன்படி ரெயில்வே அதிகாரிகளை கொண்ட குழுவினர் நேற்று தனி ரெயிலில் திண்டுக்கல்லுக்கு வந்தனர். அந்த ரெயிலில் என்ஜின் மற்றும் 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. அந்த பெட்டிகளில் ரெயில் சென்று கொண்டிருக்கும் போதே தண்டவாளம், சிறிய மற்றும் பெரிய பாலங்களின் உறுதி தன்மை, சிக்னல், பாயிண்ட் ஆகியவற்றின் செயல்திறனை கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன.
இந்த ரெயில் திண்டுக்கல்லில் இருந்து கரூர் வழியாக சேலம் வரை 170 கி.மீ. தூரம் இயக்கப்பட்டது. அப்போது அந்த ரெயில் 110 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது நவீன கருவிகள் மூலம் தண்டவாளத்தின் உறுதி தன்மை உள்ளிட்டவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

Next Story