விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 17 Feb 2021 4:53 PM GMT (Updated: 17 Feb 2021 4:53 PM GMT)

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆற்றங்கரையில் அமைந்துள்ள அய்யனார், செல்லியம்மன் கோவிலிலும், அதன்பிறகு விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆழத்து விநாயகர் கோவிலிலும் உற்சவம் நடைபெறும். அந்த வகையில் கடந்த டிசம்பர் 4-ந் தேதி தேர் முகூர்த்தமும், ஜனவரி 25-ந் தேதி அய்யனார் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் ஜனவரி 26-ந்தேதி செல்லியம்மன் கோவிலில் காப்பு கட்டுதலும், கடந்த 2-ந்தேதி பால்குடம் எடுத்தல், செடல் உற்சவம் மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 6-ந் தேதி ஆழத்து விநாயகருக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்று, 14-ந்தேதி தேர் திருவிழாவும், 15-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. 

கொடியேற்றம்

இதையடுத்து நேற்று விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் கோவிலை வலம் வந்து உட்பிரகாரத்தில் அமைந்துள்ள கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஓம் நமசிவாய கோஷத்துடன் மாசி மக பெருவிழா கொடியேற்றப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கால் மண்டபம் மற்றும் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள 3 கொடி மரங்களிலும் கொடியேற்றம் நடந்தது. இதில் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மாசிமக தீர்த்தவாரி

விழாவில் வருகிற 22-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சியளித்தல் என்ற ஐதீக திருவிழாவும், 25-ந் தேதி தேரோட்டமும், 26-ந்தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 27 -ந் தேதி தெப்ப உற்சவமும், 28-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், மார்ச் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Next Story