தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீட்டெடுக்கப்படும் - பிரசார கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு


தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீட்டெடுக்கப்படும் - பிரசார கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 17 Feb 2021 7:17 PM GMT (Updated: 2021-02-18T00:52:46+05:30)

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீட்டெடுக்கப்படும் என்று பிரசார கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பிரசார கூட்டங்கள் பென்னாகரம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. காவிரி ஆற்றின் குறுக்கே நாகமரை-பண்ணவாடி இடையே பாலம் கட்ட வேண்டிய பகுதியை படகில் சென்று நேரில் பார்வையிட்டார்.

அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள், ஏரியூர் சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விவசாய விளை பொருட்களை விற்பனை செய்வதற்காகவும், கல்விக்காகவும் மேட்டூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்போது பரிசல் இயக்கம் தடைப்படுவதால் சுமார் 150 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு இந்த பகுதிக்கு சென்று வரவேண்டி உள்ளது. இதனால் நாகமரை-பண்ணவாடி இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி. ஏரியூரில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பென்னாகரத்தில் வாகன பிரசாரம் செய்தார். கடமடையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். பாப்பாரப்பட்டியில் நெசவாளர்கள், வணிகர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டார். 

இந்த நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நாகமரை-பண்ணவாடி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை பொதுமக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளுடன் மேம்படுத்தப்படும். தர்மபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படும். தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீட்டெடுக்கப்படும்.

நலிவடைந்த நெசவு தொழிலை பாதுகாக்கவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்படும். அனைத்து தரப்பு மக்களின் தேவைகள் கண்டறியப்பட்டு நிறைவேற்றப்படும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரகூர், மல்லாபுரம் ஆகிய இடங்களில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மாரண்டஅள்ளி பகுதியில் அவர் வாகன பிரசாரம் மேற்கொண்டார். கொலசனஅள்ளியில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார். பின்னர் பிக்கனஅள்ளி பகுதியில் வட்டார அளவிலான குழுக்களை சந்தித்து பேசினார். இந்த கூட்டங்களில் விவசாயிகள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story