ராசிபுரம் அருகே மோட்டார்சைக்கிள்- மொபட் மோதல்; தையல் தொழிலாளி பலி


ராசிபுரம் அருகே மோட்டார்சைக்கிள்- மொபட் மோதல்; தையல் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 17 Feb 2021 8:27 PM GMT (Updated: 2021-02-18T02:01:33+05:30)

ராசிபுரம் அருகே மோட்டார்சைக்கிள், மொபட் மோதி விபத்துக்குள்ளானதில் தையல் தொழிலாளி பலியானார். 2 பெண்கள் காயம் அடைந்தனர்.

ராசிபுரம்,

ராசிபுரம் அருகே உள்ள பெருமாக்கவுண்டம்பாளையம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சீரங்கன். இவரது மகன் செல்வக்குமார் (வயது 43). இவர் ராசிபுரம் கடைவீதியில் உள்ள ஜவுளிக்கடையில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
 
இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். ராசிபுரம் அருகே பட்டணம் முனியப்பன்பாளையம் கிழக்கு காடு பகுதியைச் சேர்ந்த மணி மனைவி லட்சுமி (50). அதே பகுதியை சேர்ந்த ஆணையப்பன் மனைவி அமுதா (42) ஆகியோர் அமுதாவின் உறவினர் வீட்டு திருமணத்திற்காக ராசிபுரம்- சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு மொபட்டில் சென்றனர். மொபட்டை லட்சுமி ஓட்டினார். அமுதா பின்னால் அமர்ந்து இருந்தார்.

அப்போது ராசிபுரம்- ஆத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது ராசிபுரத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் சென்ற செல்வகுமார் மோட்டார்சைக்கிளும், லட்சுமி ஓட்டிச்சென்ற மொபட்டும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லட்சுமிக்கு தலை, மூக்கு போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டது. பின்னால் உட்கார்ந்து வந்த அமுதா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். 

மோட்டார் சைக்கிளில் சென்ற செல்வகுமார் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த செல்வகுமார் மற்றும் லட்சுமி இருவரையும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செல்வகுமார் சேலம் அரசு மருத்துவமனைக்கும், லட்சுமி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். இதில் தையல் தொழிலாளி செல்வகுமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பலியான செல்வகுமாருக்கு சுமதி (33) என்ற மனைவியும், ஸ்ரீராம் (15) தினேஷ் ராம் (14) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

Next Story