சர்க்கரை ஆலை நிலுவை தொகையை பெற்று கொள்ளலாம்


சர்க்கரை ஆலை நிலுவை தொகையை பெற்று கொள்ளலாம்
x
தினத்தந்தி 17 Feb 2021 8:28 PM GMT (Updated: 17 Feb 2021 8:28 PM GMT)

சர்க்கரை ஆலை நிலுவை தொகையை உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் வசந்தராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை, பிப்
சர்க்கரை ஆலை நிலுவை தொகையை உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் வசந்தராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2008-2009-ம் ஆண்டு கரும்பு அரவைக்கு கரும்பு சப்ளை செய்துள்ள 2 ஆயிரத்து 669 அங்கத்தினருக்கு லாபத்தில் பங்காக நிலுவை தொகை ரூ.1 கோடியே 18 லட்சத்து 25 ஆயிரம் வழங்க வேண்டி உள்ளது. அதே போல் 2015-2016-ம் ஆண்டில் அரவை பருவத்திற்கு கரும்பு சப்ளை செய்துள்ள 1,604 அங்கத்தினர்களுக்கு மாநில அரசின் பரிந்துரை விலை, நிலுவைத்தொகை ரூ.10 கோடியே 73 லட்சத்து 42 ஆயிரம் வழங்க வேண்டி உள்ளது.
இந்த தொகைகள் அங்கத்தினரின் வங்கி கணக்கில் தேசிய சர்க்கரை ஆலையின் மூலமாக நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அதில் வங்கி கணக்கு முறையாக வைத்திருக்காத அங்கத்தினர்கள், கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்த அங்கத்தினர்கள் மற்றும் இறந்த அங்கத்தினர்களின் வாரிசுகள் ஆகியோர் இந்த தொகையை பெறுவதற்கு உரிய ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். 
சான்றுகள்
அதன்படி கரும்பு சப்ளை விவரம், ஆதார் கார்டு, வங்கி கணக்கு விவரம், கிராம நிர்வாக அலுவலரின் அடையாள சான்று, வாரிசுதாரரின் ஆட்சேபணை இல்லை கடிதம், அரசு முத்திரை தாளில் நோட்டரி பப்ளிக் சான்று ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட கோட்ட கரும்பு அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 
அவர்களது சிபாரிசுடன் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தங்களுக்கான தொகையினை பெற்று கொள்ளலாம். ஆலை அங்கத்தினர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் விவசாயத்தில் நல்ல லாபம் பெறவும், அரசு வழங்கும் மானியங்களை பெறுவதற்கும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story