வீட்டின் பூட்டை உடைத்து ரூ.13 லட்சம், நகைகள் கொள்ளை


வீட்டின் பூட்டை உடைத்து ரூ.13 லட்சம், நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 17 Feb 2021 8:44 PM GMT (Updated: 2021-02-18T02:14:23+05:30)

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.13 லட்சம், தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி, 

திருச்சி உறையூர் லிங்கநகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 35). ஓவியரான இவர் தனியார் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் படம் வரையும் பணி செய்து வருகிறார். மேலும், இவர் உறையூரில் ஓய்வுபெற்ற தொலை தொடர்பு அதிகாரி ஒருவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

இவருக்கு சொந்தமாக கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள காலிமனையை விற்பனை செய்த ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தை வீட்டின் பீரோவில் வைத்து இருந்தார். அந்த தொகையில் ரூ.50 ஆயிரத்தை மட்டும் எடுத்து கொண்டு கடந்த 12-ந் தேதி அவர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் மணவிடுதிக்கு சென்று இருந்தார்.

ரூ.13 லட்சம் கொள்ளை

அப்போது இவருடைய வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை நெம்பி உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வீட்டின் பீரோவில் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதில் இருந்த ரூ.13 லட்சத்தையும், 6 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர். அதன்பிறகு கடந்த 15-ந் தேதி அவரது வீட்டின் பின்பக்க கதவில் பூட்டு நெம்பி இருந்ததை கண்ட வீட்டின் உரிமையாளர் ராஜன் இது குறித்து சங்கருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே அவர் வீட்டிக்கு வந்து பார்த்தார். அங்கு பீரோவில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விரல்ரேகை நிபுணர்களும் வந்து சோதனை செய்தனர். தொடர்ந்து இது குறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story