வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் திருவிழா- அறநிலையத்துறை நிபந்தனைபடி நடத்த ஆர்.டி.ஓ. உத்தரவு


வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் திருவிழா- அறநிலையத்துறை நிபந்தனைபடி நடத்த ஆர்.டி.ஓ. உத்தரவு
x
தினத்தந்தி 17 Feb 2021 10:56 PM GMT (Updated: 2021-02-18T04:26:09+05:30)

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் வருகிற மார்ச் மாதம் 16-ந்தேதி திருவிழா தொடங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறை நிபந்தனைபடி கோவில்களில் திருவிழா நடத்த ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் உத்தரவிட்டார்.

ஈரோடு
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் வருகிற மார்ச் மாதம் 16-ந்தேதி திருவிழா தொடங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறை நிபந்தனைபடி கோவில்களில் திருவிழா நடத்த ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் உத்தரவிட்டார்.
வகையறா கோவில்கள்
ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் வகையறா கோவில்களாக சின்ன மாரியம்மன்,        வாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் தேர் மற்றும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மட்டும் திருவிழா நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர் மற்றும் குண்டம் திருவிழா வருகிற மார்ச் மாதம் 16-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து 20-ந்தேதி இரவு கோவில்கள் முன்பு கம்பம் நடப்படுகிறது. 30-ந்தேதி வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்.
மஞ்சள் நீராட்டு விழா
31-ந்தேதி சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும், ஏப்ரல் மாதம் 3-ந்தேதி கம்பம் பிடுங்கப்பட்டு, மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சி
அதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. சைபுதீன் கூறியதாவது:-
கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக காணப்பட்டதால், திருவிழா முழுமையாக நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு திட்டமிட்டபடி, இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளின்படி நடக்கும். அதிக கூட்டம் கூடக்கூடாது. பூச்சாட்டுதல், குண்டம் இறங்குதல், கம்பம் பிடுங்குதல் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு பகுதியிலும் தலா 100 பேருக்கும் குறைவாக பக்தர்கள் பங்கேற்கும் வகையில் திட்டமிட வேண்டும்.
கோவிலுக்கு வரும்போது பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பெரிய மாரியம்மன் கோவில் அருகில் 29 கடைகள் மட்டும் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இசை நிகழ்ச்சி, பிற கலை நிகழ்ச்சி, மேடை கச்சேரி, சாலை ஓர கடைகள், அன்னதானம் வழங்குதல், கூழ் ஊற்றுதல், பிரசாதம் வழங்குவதற்கு அனுமதி இல்லை. அரசு அவ்வப்போது தெரிவிக்கும் நடைமுறைகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story